சேலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க அரசு ரூ.2.50 கோடி மானியம் சேலம் கலெக்டர் ரோகிணி

சேலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க அரசு ரூ.2.50 கோடி மானியம்

#சேலம் #மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.2.50 கோடி மானியம் வழங்க உள்ளது என ஆட்சியர் #ரோகிணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதற்காக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ ஏ.பி.சக்திவேல் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி அவர்கள்  பேசியது:
சேலம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்பேரில் ஜவுளி உற்பத்தியாளர்கள், சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதற்கு உட்கட்டமைப்பை செலவினத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி மானியமாக மாநில அரசு வழங்கவுள்ளது.

ஒவ்வொரு சிறிய ஜவுளி பூங்காவும் ஒரு சிறப்பு நோக்க முகமையை பதிவு செய்திருக்க வேண்டும். முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்க முகமையை அங்கம் வகிக்கவும் அதற்கான தனது பங்கினை அளிக்கவும் எழுத்து மூலமாக விருப்பம் தெரிவித்தல் வேண்டும்.
குறைந்தபட்சம் 10 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 10 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். நிலமானது சிறப்பு நோக்க முகமை பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும்.

நிலம், தொழிற்சாலை கட்டடம், இயந்திரம் மற்றும் தளவாடங்களுக்கு செய்யப்படும் முதலீடானது உட்கட்டமைப்பு வசதிக்கு செலவிடப்படும் முதலீட்டை விட இரண்டு மட்டு அதிகமாக இருத்தல் வேண்டும்.
சிறப்பு நோக்க முகமையில் அரசின் பிரதிநிதி ஒருவர் இடம் பெற்றிருக்க வேண்டும். பூங்காவின் பெயரில் தேசிய வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
பூங்கா அமைப்பதற்கு மானியம் மூன்று தவணைகளில் விடுவிக்கப்படும். மேலும் சிறப்பு நோக்க முகமை ஒவ்வொரு முறையும், மானியம் விடுவிக்க கோரிக்கை சமர்ப்பிக்கும் போது தொடர்புடைய ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்த பத்திரங்கள் உடன் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு விடுவிக்கும் மானியத்துக்கு சிறப்பு நோக்க முகமை தனியான கணக்கை மேற்கொள்ள வேண்டும். இக்கணக்கானது அரசின் தணிக்கைத் துறையினரால் தணிக்கை செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் ஜவுளி பூங்காவின் முன்னேற்றம் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்.
திட்டப் பணியை முடிக்கும் முன்பே திட்டப் பணியிலிருந்து எந்த சிறப்பு நோக்க முகமையாவது விலக நேரிடின் அந்தகால கட்டம் வரை பெற்ற மாநில அரசு மானியத்தை அதற்கான வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும். வட்டி சதவீதத்தை திட்ட அங்கீகாரக் குழு நிர்ணயிக்கும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மாவட்டத்திலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அவர்களின் கருத்துகளை பரிசீலிக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
சேலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க அரசு ரூ.2.50 கோடி மானியம் சேலம் கலெக்டர் ரோகிணி சேலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க அரசு ரூ.2.50 கோடி மானியம் சேலம் கலெக்டர் ரோகிணி Reviewed by Unknown on 06:16 Rating: 5

No comments:

Powered by Blogger.