முந்திரி ரவாவும் தேங்காய்ச் சட்னியும் எப்படி செய்வது ?
முந்திரி ரவாவும் தேங்காய்ச் சட்னியும்
சாதா தோசையை நான்கு வயதுக் குழந்தை கூட சுட்டுத்தருவாள். ஆனாலும் ஒரு சிறப்புணவை செய்ய அதிக வேலை ஒன்றும் கிடையாது. சற்றே சிந்தனையும், கற்பனை வளமும் இருந்தால் புதியனவற்றை முயன்று பார்க்கலாம். இப்படி கன்னடத்துப் பைங்கிளியைப் போல ஆரம்பிக்க வேண்டியதில்லை…….
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்…
///
ஆரம்பத்தில் எதுவும் தெரியாது போலத்தான் இருக்கும். கடலைப் பருப்பிற்கும் துவரம் பருப்பிற்கும் வித்தியாசம் தெரியாமலிருக்கலாம். சீரகம் எப்படி இருக்கும் சோம்பு எப்படி இருக்கும் என்று புரியாமல் இருக்கலாம். அதையெல்லாம் தெரிந்துகொள்ள ஒரு காலம் வர வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை.
///
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
///
அது இல்லை இது இல்லை என்று கவலைப்படாமல் இருப்பதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்தால் ஒரு விடை கிடைக்கும். ஒரு கப் ரவாவை மூன்று கப் நீரில் போட்டு அதனுடன் சற்றே அரிசி மாவும், மைதாவும் சேர்த்துக் கரைக்க வேண்டும். பின் ஒரு பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி, சிலபல மிளகுகள் மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை பத்து சுற்றுகள் மிக்ஸியில் சுழலவிட்டு அந்தக் கரைசலில் தூவலாம். சில முந்திரிகளை பல துண்டுகளாக்கி அதில் கலக்கலாம். இதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமேயில்லை. வேண்டிய அளவு உப்பிட்டு சுமார் இருபது நிமிடங்கள் இப்படி வைத்துவிட்டு தோசைக்கல்லை அடுப்பிலேற்றி நன்கு காய்ந்ததும் முதல் தோசையை ஊற்றிப் பார்க்கலாம்.
///
நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
///
இப்போது நீங்கள் முந்திரி ரவா செய்யும் விற்பன்னர் ஆகிவிட்டீர்கள். கண்ணை மெல்ல மூடி வாசனை மெல்ல பிடித்து தன்னை எண்ணி வாடாமல் தோசை சுவைத்துப் பார்க்கலாம்.
///
நான்கு வரமிளகாயை ஒரு சொட்டு எண்ணையில் வறுத்து, இருபிடி உடைத்த கடலையும், ஒரு கப் தேங்காய்த் துருவலையும், ஜெம்ஸ் மிட்டாய் அளவு புளியையும், நாக்கு ஒத்துக்கொள்ளுமளவு உப்பையும் இட்டு முப்பது நொடிகள் மிக்ஸியைச் சுழலவிட்டால் எஞ்சி நிற்பதே தேங்காய்ச் சட்னி.
///
தனிமையில் கானம் சபையிலே மௌனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்
///
செய்யச் செய்ய வருவதே அனுபவம். தொடங்கும் வரை அது வருவதே இல்லை. உங்களை சமைக்கச் சொன்னால் இனி நிச்சயம் அசத்திவிடுவீர்கள். முந்திரி ரவாவும் அதனுடன் தேங்காய்ச் சட்னியும் என்னவோர் திவய சுவை என்பதை பாடிக்கொண்டோ, பாடலைக் கேட்டுக்கொண்டோ சுவைத்துப் பாருங்கள்….
No comments: